மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாடே எதிர்பார்க்கும் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைக்க 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திதார். அத்துடன் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியுடன் தொலைபேசியில் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.
வாக்கு எண்ணிக்கையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மாநில கட்சிகளின் கூட்டணியில் 3-வது அணியை உருவாக்கி ஆட்சிய அமைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் சந்திரசேகர் ராவ். இந்நிலையில் சந்திரசேகர் ராவின் முயற்சிக்கு ஒடிசா தரப்பில் இருந்தும் புதிய ஆதரவு கிடைத்திருப்தாக தெரிகிறது.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு தனா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது பேசியுள்ள அம்மாநில பிஜு ஜனதா தள துணைத் தலைவர் எஸ்.என். பாட்ரோ, ஒடிசாவிற்கு சிறப்பு அந்தஸ்து தரும் எந்தவொரு அணிக்கும் பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவிக்கும் எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு மட்டுமே சம அளவில் ஆதரவு தருவோம் என்ற பழைய நிலைப்பாட்டை இனிமேல் பிஜு ஜனதா தளம் கடைபிடிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் வாய்ப்பு ஏற்பட்டால் 3-வது அணிக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவிக்க தயங்காது என்பது வெளிப்படையாக தெரிகிறது. தேசிய அரசியலில் பிஜு ஜனதா தளம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் எஸ்.என்.பாட்ரோ குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை கூட்டணியில் இருந்தது. அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையேயான கருத்து வேறுபாடு எழவே கூட்டணி முறிந்தது. அதனைத்தொடர்ந்து பிஜு ஜனதா தளம், தொடர்ந்து பாஜவைவை மதவாத கட்சி என விமர்சித்து வந்தது. அத்துடன் காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்றும் விமர்சனம் செய்தது.
இதனிடையே சமீபத்தில் ஒடிசாவை ஃபோனி புயல் கடுமையாக தாக்கியது. அப்போது புயல் தொடர்பான நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒடிசாவிற்கு சிறப்பு அந்தஸ்து தரும் எந்தவொரு அணிக்கும் பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவிக்கும் என்ற நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்துள்ளதால், 3-வது அணி தேர்தல் முடிவுக்கு பின் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.