இந்தியா

டாடா குழுமத்திற்கு விற்கப்படும் 82 ஆண்டுகள் பழமையான 'பிஸ்லேரி' நிறுவனம்; காரணம் இதுதான்!

Abinaya

82 ஆண்டுகள் பழமையான பிஸ்லேரி தண்ணீர் நிறுவனத்தை டாடாவிற்கு சுமார் 7,000 கோடிக்கு விற்க, அந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சௌஹான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் ஒப்பந்தத்தின் படி தற்போதைய நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு பிஸ்லேரியை வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது.

பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் ரமேஷ் சௌஹான், குளிர்பான பிராண்டுகளான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்காவை, கோகோ கோலாவுக்கு விற்ற பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிஸ்லேரி நிறுவனத்தை விற்கவுள்ளார்.

’’பிஸ்லெரியை விற்பது இன்னும் ஒரு "வேதனைக்குரிய" முடிவாக இருந்தாலும், டாடா குழுமம் அதை இன்னும் சிறப்பாக வளர்த்து, கவனித்துக் கொள்ளும். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது‘’ என்று பிஸ்லேரியின் தலைவர் சௌஹான் கூறுகிறார்.

தனது 82வது வயதில் ரமேஷ் சௌஹான் பிஸ்லேரியை விற்பனை செய்கிறார். சௌஹானுக்கு வாரிசு இல்லை என்பதால், தனது பிஸ்லேரி பிராண்டை மேலும் விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட ஆளில்லை என்பது தான் பிரதானம் காரணமாக சௌஹான் கூறியுள்ளார். அவரது மகள் ஜெயந்திக்கு இந்த பிசினஸ் பக்கம் வர விருப்பமில்லை என கூறப்படுகிறது.

பிஸ்லேரி இன்டர்நேஷனல் பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட வாட்டர் பிராண்ட் - வேடிகா, லிமோனாட்டா, ஃபோன்சோ மற்றும் பிஸ்லெரி சோடா ஆகியவற்றை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

90களின் பிற்பகுதியில் வளர்ந்து வந்த போட்டிகளுக்கு மத்தியில் வித்தியாசமான விளம்பரங்களை உருவாக்கவும், தனித்து நிற்கவும், 360 டிகிரியில் பிராண்ட் பிரச்சாரத்தை முன்னெடுத்து ‘‘There is just one Bisleri’ என்பதுடன் இதர நிறுவனங்களுக்கு கடும் சவாலாக களத்தில் நின்றது. மேலும் தயாரிப்பு தத்துவத்தைத் தொடர்புகொள்வதற்கும், பிஸ்லேரி "தூய்மையானது மற்றும் பாதுகாப்பானது" என்ற செய்தியை வலுப்படுத்துவதற்கும் நிறுவனம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தியது. இவ்வாறு பல வழிகளை உருவாக்கி முடிந்தவரை பல நுகர்வோரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்தது பிஸ்லேரி, முக்கியமான சிக்கலை எதிர்கொண்டது. பிஸ்லேரி என்ற பெயரில் போலிகள் உருவானது. இதற்கு தீர்வாக 2017ல், பிஸ்லேரி அதன் பேக்கேஜிங்கில் 14 வெவ்வேறு மொழிகளுடன் ஒவ்வொரு உள்ளூர்களுக்கும் சென்றது. வெவ்வேறு சந்தைகளில் உள்ள உள்ளூர் மக்களுடன் இணைவதற்கும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழிகளில் தங்களது பிராண்டை அடையாளம் கண்டு தொடர்புகொள்வதற்கும் உதவுவதற்காக இந்தியா முழுவதும் பிராந்திய மொழிகளில் லேபிள்களை பிராண்ட் அறிமுகப்படுத்தியது. இது நுகர்வோர்கள் உண்மையான பிஸ்லேரி பாட்டிலை அடையாளம் கண்டுகொள்ளவும், போலியான பிராண்டை வாங்குவதை தவிர்க்கவும் உதவியது. 2019 ஆம் ஆண்டில், ஒட்டகங்கள் பிஸ்லேரி தண்ணீரைக் குடிப்பதைக் போன்ற விளம்பரம் வைரலானது.

காலத்திற்குகேற்ப பிஸ்லேரி தனது பிராண்டிங்கை மாற்றிக்கொண்டு டிஜிட்டல் அலைவரிசையில் நுழைந்து, சமூக ஊடக தளங்களில் பிராண்டை மெருக்கேற்றி கொண்டது.

அடிப்படையில் குடிநீர் அழிந்து வரும் பொருளாகிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலுவான பிராண்ட் பிஸ்லேரியின் நம்பகதன்மையை டாடா குழுமம் எப்படி முன்னோக்கி எடுத்து செல்லப்போகிறது, அதற்காக என்னென்ன திட்டங்களை வைத்துள்ளது என்பது வரும் காலங்களில் தெரிய வரும்.