குற்றம் PT
இந்தியா

5 வினாடிகளில் 10 முறை.. ஜிம் உரிமையாளரைச் சுட்டுக் கொன்ற பிஷ்னோய் கும்பல்.. ஹரியானாவில் பயங்கரம்!

ஹரியானாவில் பிஷ்னோய் கும்பல், ஜிம் உரிமையாளரைச் சுட்டுக் கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

இந்தியாவில் சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல், மிகப்பெரிய குற்றப் பின்னணி கொண்டது. மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு விரோதச் செயல்கள் ஈடுபடும் இந்தக் கும்பல், சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்துள்ளனர். குறிப்பாக, இந்தக் கும்பல் உலகம் முழுவதும் உள்ள மாஃபியாக்களுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. சமீபத்தில், இந்தக் கும்பல் கனடா நாட்டு கிரிக்கெட் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. கனடாவின் தேசிய அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஒரு குறிப்பிட்ட வீரரை கவனித்துக் கொள்ள தவறினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்தக் கும்பல் அச்சுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த உடற்பயிற்சிக்கூட உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஹரியானாவின் ஹான்சியில் உள்ள ஃபவ்வாரா சௌக் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஜிம் உரிமையாளர் கபில் சுட்டுக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கிட்டத்தட்ட 5 விநாடிகளில் அவர் மீது 10 முறை சுட்டுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த தாக்குதலின்போது பெண் ஒருவரும் காயம்பட்டார். பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். பின்னர், ரவுடி ஹரி பாக்சர் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ செய்தி மூலம், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கொலை குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, கபிலுக்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, கபிலுடன் சம்பந்தப்பட்டவர்களும் குறிவைக்கப்படுவார்கள் என அந்தக் கும்பல் எச்சரித்துள்ளது.