இந்தியா

கைதிகள் கைப்பக்குவத்தில் ஜெயில் ‘பிரியாணி’ - ஆன்லைனில் அமோக விற்பனை

கைதிகள் கைப்பக்குவத்தில் ஜெயில் ‘பிரியாணி’ - ஆன்லைனில் அமோக விற்பனை

webteam

சிறைக் கைதிகள் சமைத்த சிக்கன் பிரியாணி காம்போ பேக்கேஜில் 127 ரூபாய்க்கு கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவில் உள்ள வையூர் மத்தியச் சிறை உணவு விநியோகத்தில் அசத்தி வருகிறது. இந்தச் சிறையில் கைதிகளுக்கு செய்யப்படும் உணவை, கொஞ்சம் அதிகமாக செய்து விற்பனை செய்யலாம் எனச் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நாள்தோறும் அதிகமாக செய்யப்படும் சப்பாத்திகளை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யத்தொடங்கியது. 

இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க, பேக்கரி உணவுப்பொருட்கள், அசைவக் குழம்புகள் மற்றும் பிரியாணி ஆகியவற்றை கைதிகளை வைத்து சமைத்து கவுண்டர்களில் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர். கைதிகளின் சுவையான சமையல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிட, சிறை நிர்வாகத்தின் வருவாய் அதிகமாக உயர ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த சிறை நிர்வாகம், ஆன்லைனில் தங்கள் உணவு விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்காக அவர்கள் உணவு டெலிவரி செய்யும் சுவிக்கி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் காம்போ பேக்கேஜ் ஒன்றை சிறை நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

அதன்படி, ரூ.127க்கும் 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் ஒன்று, மூன்று சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த விலையில், இத்தனை உணவுப்பொருட்களா என மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை அள்ளிக்குவித்து வருகின்றனர். மக்களின் வரவேற்பைக் கண்டு சிறை நிர்வாகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.