இந்தியா

முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை !

jagadeesh

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்டு பள்ளியில், ஆரம்ப கால படிப்பை முடித்த பிபின் ராவத், ராணுவத்தின் மீதான ஆர்வத்தால், கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார். வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார்.

பின்னர் 1978-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார் பிபின் ராவத். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை தாங்கினார்.

படிப்படியாக இந்திய ராணவத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரித்த பிபின் ராவத், கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். தற்போது முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் பிபின் ராவத்துக்கு, ராணுவம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.