12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் கிரிமினல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை சட்டமாக்குவதற்கான திருத்த மசோதா இயற்றப்பட்டு, மக்களவையில் இன்று மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கிரிமினல் திருத்தச் சட்டத்தில் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கான குறைந்தபட்ச கடுங்காவல் தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கினால் இச்சட்டத்தின்படி 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அல்லது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
12 வயதுக்கு குறைவான சிறுமிகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முடியும் வரை சிறைவாசமோ அல்லது மரண தண்டனை வழங்கவோ இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளது. அதே போல் மேல் முறையீடுகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.