குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் இன்றளவும் இந்தியர்களின் மனதை உலுக்கும் துயர சம்பவமாக இருந்து வருகிறது. இந்தக் கலவரத்தில், 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், அவருடைய 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த பில்கிஸ் பானு, இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து, சிபிஐ (CBI) விசாரணையின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் உட்பட மொத்தம் 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், கடந்த 2008-ஆம் ஆண்டு 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு காவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை 2017-ம் ஆண்டு மே 4-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
அப்படி, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10 முதல்15 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், குஜராத் அரசுக்கு குற்றவாளிகளை விடுவிக்க அதிகாரம் இல்லை என்றும், மகாராஷ்டிரா அரசிற்கே அந்த அதிகாரம் உண்டு என்றும் கூறி, 11 பேரின் விடுதலையை 2024-ம் அண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டது. இந்தச்சூழலில் தான், தற்போது பில்கிஸ் பானு குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையில், மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், பின்சந்திர ஜோஷி மற்றும் பிரதீப் மோதியா ஆகிய இரு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, குற்றவாளிகள் இருவரும் ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், மேல்முறையீட்டாளர்களில் ஒருவரது பெயர் ஆரம்பக்கட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெறவில்லை என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும், வழக்கின் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும்,17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்குவதோடு, அவர்களது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
இவ்வாறு, பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 பேருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.