இந்தியா

பில்கிஸ் பானோ வழக்கு; விசாரணையில் இருந்து தானாக விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

PT

பில்கிஸ் பானு வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி பிலா எம் திரிவேதி தானாக விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுங் குற்றங்கள் அரங்கேறியது. இதில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும், கடந்த 2008-ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் குற்றவாளிகள் 11 பேருக்கு சமீபத்தில் குஜராத் அரசு சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளித்தது. வெளியில் வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி இந்துத்துவா அமைப்புகள் மற்றும் உறவினர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா மற்றும் ஏராளமான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்து, குஜராத் மாநில சட்ட விதிகளின்படி குற்றவாளிகள் விடுதலை பெற தகுதியுடையவர்களா இல்லையா என்பதுதான் கேள்வி. எனவே குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தனர்.

இதில் பதிலளித்த குஜராத் அரசு நன்னடத்தை காரணமாக இந்த 11 பேரின் விடுதலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது என்றும், தண்டனை காலமான 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிராக பாதிக்கப்பட்டவரான பில்கேஸ் பானு சார்பில் உச்சநீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் குற்றவாளிகளை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக குஜராத் அரசு முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராகவும், பில்கேஸ் பானு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதி அஜஜ் ரஸ்தோகி, பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிலா எம் திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து தானாக விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.