நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம், இட நெருக்கடி, வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம் இதைச் சமாளிக்க மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து கட்டண நிர்ணயிக்கப்பட்ட தனியார் சேவைகளின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், இவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சேவை அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் உள்ளது. அங்கும் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை தடை விதித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின்போது, தனி நீதிபதி பி.ஷியாம் பிரசாத், பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அவர் சொன்ன காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளதால் , ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இதை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'கர்நாடகத்தில் 4, 3 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று வாடகை அடிப்படையில் டாக்சி சேவையை வழங்குகின்றன. ஆனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக மாற்றுவது என்பது சாத்தியமில்லை. இத்தகைய பைக் டாக்சிக்கு நாட்டில் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மனுதாரர்கள் சார்பில், ”நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து ஜூன் 16 முதல் கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட உள்ளது. மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.