இந்தியா

நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் !

webteam

பெண்கள் முன்னேற்ற திட்டங்களின் பலனாக ஒடிசாவில் தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நவீன் பட்நாயக் நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பெற்றார்.

ஒடிசாவின் கட்டாக் நகரில் பிஜுபட்நாயக்- கியான்பட்நாயக் தம்பதியின் மகனாக 1946ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தவர் நவீன் பட்நாயக். 72 வயதாகும் இவர், டேராடூனில் உள்ள வெல்ஹாம் ஆண்கள் பள்ளியில் படித்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தனது தந்தை அரசியல்வாதியாக இருந்தாலும், நவீன் அதிலிருந்து விலகியே இருந்தவர். 1997ஆம் ஆண்டில் தந்தை பிஜு பட்நாயக் மறைவைத் தொடர்‌ந்து, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 

1997ஆம் தந்தை பெயரிலேயே ஆண்டு பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். ‌1998 ல் வாஜ்பாய் தலைமையிலான அரசில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 2000ஆம் ஆண்டில் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டு முதல்வரானார். அப்போது முதல் இப்போது வரை ஒடிசாவின் முதல்வராகத் தொடரும் நவீன் பட்நாயக்,‌ அதிகம் அரசியல் பேசாத அரசியல்வாதி. 

ஊழல் கறைபடியாத நிர்வாகம், ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் ஆகியவையே நவீனின் தொடர் வெற்றிக்குக் காரணங்கள். 2004ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தோல்வியை சந்தித்தபோதிலும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கால் அக்கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் 2007ல் கந்தமால் மாவட்டத்தில் சுவாமி லட்சுமணானந்தா கொல்லப்பட்டதில் பாரதிய ஜனதா, நவீன் பட்நாயக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அங்கு நடந்த கலவரத்தில் சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங் தளத்தின் பங்கு குறித்து நவீன் எச்சரிக்கவே, நாளடைவில் மோதல் அதிகரித்து கூட்டணி முறிந்தது.பின்னர் 2009 தேர்தலில் தனித்தே கள‌ம் கண்ட‌ நவீன் பட்நாயக், சட்டபேரவைத் தேர்தலில் அபார வெற்றி கண்டு மூன்றாவது முறையாக முதல்வரான அவர், மக்களவையிலும் 14 இடங்கள் வென்றார்.

இதனைதொடர்ந்து 2014ல் நாடு முழுவதும் மோடி அலை வீசியதாக கூறப்பட்ட சூழலிலும், பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதுடன், ஒடிசாவில் 21க்கு 20 இடங்களின் வென்று அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் இம்முறை தேர்தலில், மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த கிராமத்துப் பெண்கள் 8 பேரை நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தினார் நவீன் பட்நாயக். அவரது பெண்கள் முன்னேற்ற திட்டங்களின் பலனாக மகளிரிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளதன் மூலம் கை மேல் பலனாக மீண்டும் 5ஆவது முறையாக ஒடிசா முதல்வராகிறார்.

தொடர்ந்து 19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பெற்றுள்ளார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதி பாசு 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு பிறகு அதிக நாட்கள் முதலமைச்சராக நவீன் பட்நாயக் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.