பாதுகாப்பு படையினர் PTI
இந்தியா

சத்தீஸ்கர் தேடுதல் வேட்டை | மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. 3 காவலர்களும் மரணம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில், மேலும் 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மற்றும் தண்டோவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,மாவட்ட ரிசர்வ் காவலர் , சிறப்பு அதிரடிப் படை மற்றும் CRPF-ன் உயரடுக்கு பிரிவான கோப்ரா வீரர்கள் அடங்கிய கூட்டுப் படை போன்றவை நேற்று( புதன் கிழமை) மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த மோதலில் சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் அலகான மாவட்ட ரிசர்வ் காவலர் பிரிவைச் சேர்ந்த 3 காவல்துறையினரும் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள்

நேற்று, 12 மாவோயிஸ்டுகளில் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை வனப்பகுதியில் நடந்த தேடுதலில் மேலும், 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தத் தாக்குதலில் பலியான மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.

இதையடுத்து, இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஐஜி சுந்தர்ராஜ், பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில், 18 நக்ஸ்லைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து எல்.எம்.ஜி, ஏ.கே. 47, எஸ்.எல்.ஆர் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போதும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி மோடியம் வெல்லா என்பவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள், அமித் ஷா

முன்னதாக, மாவோயிஸ்டுகளுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் நிலையில், மாவோயிஸ்டுகள் மீது கடுமையான தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் நடத்திவருகின்றனர். அதன்படி, சத்தீஸ்கரில் மாநிலத்தில் இந்த ஓராண்டில் மட்டும் 285 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.