பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதையொட்டி அம்மாநிலத்தில் சிறப்புத் திருத்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தங்களுடைய அடையாள அட்டையாக காண்பிக்க மொத்தம் 11 ஆவணங்களை பட்டியலிட்டிருந்த நிலையில், அதில் ஏற்கெனவே உள்ள வாக்காளர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகள் இல்லாதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, இந்தச் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் அடையாள ஒன்றில் விண்ணப்பத்தாரரின் படத்திற்குப் பதிலாக முதல்வர் நிதிஷ் குமாரின் படம் இடம்பெற்றிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. மாதேபுரா நகராட்சி மன்றத்தைச் சேர்ந்த அபிலாஷா குமாரி என்பவர், தனது முகவரியைப் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். அதில் அவரது முகவரி அனைத்தும் சரியாக இருந்துள்ளது. ஆனால், அவரது புகைப்படத்திற்குப் பதிலாக முதல்வர் நிதிஷ்குமாரின் படம் இடம்பெற்றுள்ளது. இதுதான் தற்போது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதுகுறித்து அபிலாஷா குமாரியின் கணவர், “அட்டையில் முகவரி எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் போட்டோ மட்டும் மாறியுள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது அரசாங்கத்தின் அலட்சியத்தை பிரதிபலிக்கிறது. ஒரு பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் பதவியில் இருக்கும் முதலமைச்சரின் முகம் இருப்பது ஒரு சிறிய தவறு அல்ல. இது நகைப்புக்குரியது. ஆனால் இது அமைப்பில் ஒரு பெரிய குறைபாடாகும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அட்டையில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்வதற்குப் பொறுப்பான பூத் நிலை அதிகாரி (BLO) இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கச் சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கடுமையான பதிவுகளைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் பயனர் ஒருவர், “ஜெய் ஹோ தேர்தல் ஆணையம்” என்றும், மற்றொருவர், “பீகாரின் ரத்தினங்கள்” என்றும் பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ், 'அதிர்ச்சியூட்டும் மற்றும் வெட்கக்கேடானது. இதேபோன்ற வினோதமான, தவறான வாக்காளர் அடையாள அட்டைகள் பற்றிய தகவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றன. @ECISVEEP என்ன செய்கிறது? எதுவும் இல்லை. இது மிகவும் மோசமான ஒன்று. இல்லையென்றால், கடுமையான நிர்வாக அலட்சியம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக அக்கட்சி தேர்தல் ஆணையத்திற்கு 6 கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
1. உங்கள் கண்காணிப்பில் இதுபோன்ற தவறுகள் நடப்பது எப்படி?
2. தற்போது இதேபோன்று, எத்தனை தவறான வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளன?
3. இவற்றால், எந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன?
4. இதன் காரணமாக, எத்தனை கடந்த தேர்தல்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன?
5. எந்த உடனடி சரிசெய்தல் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
6. தனது சொந்தக் குழப்பங்களைச் சரிசெய்து, மக்கள் உரிமை இழக்கப்படுவதைத் தவிர்ப்பதை ECI எவ்வாறு உறுதி செய்யும்?
கடந்த காலங்களில், இதேபோன்ற குழப்பங்கள் ஆதார் அட்டைகளிலும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.