வடமாநில தொழிலாளர்கள் pt web
இந்தியா

தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பீகார் மக்கள் சேர்ப்பா? உண்மையில் என்னதான் நடக்கிறது?

ஒரு குறிப்பிட்ட பகுதியின் அரசியல் கலாச்சார வரலாறு எதுவும் தெரியாத ஒரு நபர் அந்த மாநிலத்தை ஆளும் நபரை எப்படி தேர்ந்தெடுக்க அனுமதிக்க முடியும்?"

இர்ஃபாத் சமீத் / Irfath Sameeth

பீகாரில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 6.5 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் அவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதை எதிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தமிழக கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இது என்ன பிரச்சினை? ஏன் இப்போது விவாதப்பொருளாக்கப்படுகிறது? விரிவாக பார்க்கலாம்.

என்ன சிக்கல்?

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வழக்கமாக தேர்தல் ஆணையம் ஆண்டுக்கு 2 முறை வாக்காளர் பட்டியலில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்தோர் மற்றும் நிரந்தரமாக மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள் பெயர்களை நீக்கும். ஆனால், இந்த முறை முதல்முறையாக பீகாரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு திருத்தத்திற்கான படிவத்தை பெற்று அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தேர்தல் ஆணையம் ஆண்டுக்கு 2 முறை வாக்காளர் பட்டியலில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்தோர் மற்றும் நிரந்தரமாக மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள் பெயர்களை நீக்கும்.

அதன்படி பீகாரில் உள்ள ஒட்டுமொத்த 7.8 கோடி வாக்காளர்களில் 2003 வாக்காளர் பட்டியலில் இல்லாத 3 கோடி பேர் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். இதற்கு 1 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில் திருத்த நடவடிக்கைகள் முடித்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 65 லட்சம் பேரில் 22 லட்சம் பேர் இறந்தவர்கள் என்றும் 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளனர் என்றும் 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த 35 லட்சத்தில்தான் பிற மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவர். அதில் 6.5 லட்சம் பேர்தான் இப்போது தமிழகத்தில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலை:

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை என்பது கடந்த 2 தசாப்தங்களாகவே பெருமளவில் அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு மாநில அரசு எடுத்த கணக்கெடுப்பில் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு CAG கொடுத்த அறிக்கையில் அந்த எண்ணிக்கை 43.22 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தான் இந்த எண்ணிக்கை இப்போது 70 லட்சத்தை எட்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையை முறையாக பதிவு செய்ய தமிழ்நாடு அரசு பிரத்யேக இணையதளம் கொண்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை அந்த இணையதளத்தில் 8 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை என்பது கடந்த 2 தசாப்தங்களாகவே பெருமளவில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் பீகார், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிக அளவில் வருகின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் பலர் நீண்டகாலமாக இங்கேயே தங்கியிருப்பதும் சிலர் குடும்பத்தினருடன் இங்கேயே இருந்து குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்கவும் வைக்கின்றனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்புகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மாநில திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 75% க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் 4000 முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் வரை அனுப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலர் குடும்பத்தினருடன் இங்கேயே இருந்து குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்கவும் வைக்கின்றனர். இருப்பினும் இவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்புகின்றனர்.

சர்ச்சை ஏன்?

இங்குள்ள தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று அவர்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாத நிலையில் அங்கு நீக்கப்பட்ட அவர்களது பெயர்களை தமிழ்நாட்டின் வாக்காளர்கள் பட்டியலுடன் சேர்க்க வாய்ப்பிருப்பதாகவும் இதன்மூலம் வேறு மாநிலத்தவர்களை தமிழக வாக்காளர்களாக மாற்றி அவர்களை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 326 இல் "வயது வந்தோர் வாக்குரிமை" என்ற கொள்கையில் , 18 வயதை பூர்த்தி செய்த இந்தியாவின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொரு நபரும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமையுடையவர் என்று கூறுகிறது. மேலும் பிரிவு 19 (1)(e) நாட்டின் அனைத்து குடிமகனும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் குடியேறலாம் என்கிறது. 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 19(b) இன் படி, ஒரு தொகுதியில் சாதாரணமாக வசிக்கும் ஒவ்வொரு நபரும் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய உரிமை உண்டு.

வேறு மாநிலத்தவர்களை தமிழக வாக்காளர்களாக மாற்றி அவர்களை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தேர்தல் ஆணையம்

1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20 "சாதாரண குடியிருப்பாளர்" என்ற பொருளை வழங்குகிறது.

இந்த பிரிவுகளை குறிப்பிட்ட தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்பின் படி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்து, பொதுவாக டெல்லியில் வசிக்கும் ஒருவர், டெல்லியில் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு.

இதேபோல், பீகாரைச் சேர்ந்தவராக இருந்து, பொதுவாக சென்னையில் வசிக்கும் ஒருவர், சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிப்பதாகவும் பதில் கொடுத்துள்ளது.

அரசமைப்பு / அரசியல்

இதுகுறித்து பேசிய முன்னாள் தேர்தல் அதிகாரி TS கிருஷ்ணமூர்த்தி, இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகன் நாட்டின் எந்த பகுதியிலும் குடியேற முடியும் என்றும் அந்த பகுதியில் தங்களை வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அப்படி பதிவு செய்யும் வாக்காளர் இவ்வளவு காலம் இங்கு இருக்க வேண்டும் என்கிற எந்த வரைமுறையும் கிடையாது என்றும் தேர்தல் ஆணையம் கேட்க கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களை அந்த பகுதியின் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

அரசமைப்பின் படி எந்த சிக்கலும் இல்லாத நிலையில் கட்சிகள் இதை எதிர்க்க என்ன காரணம் என்பதை மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் குறிப்பிட்டு இருக்கிறார்.

journalist ayyanathan

"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அந்தந்த மாநிலத்துக்கு என்று தனித்த கலாச்சார, அரசியல் அடையாளங்கள் ஏற்பட்டு விட்டது. பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யவோ தங்கி படிக்கவோ எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் வாக்காளராக பதிவு செய்ய மட்டுமே எதிர்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியின் அரசியல் கலாச்சார வரலாறு எதுவும் தெரியாத ஒரு நபர் அந்த மாநிலத்தை ஆளும் நபரை எப்படி தேர்ந்தெடுக்க அனுமதிக்க முடியும்?"

இங்கு உள்ள பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் முழுவதுமா இங்கு குடிபெயரவில்லை. அவர்களின் குடும்பங்கள் இப்போதும் அவர்களது சொந்த ஊர்களில் இருக்கிறார்கள். அவர்களை பார்க்க இவர்கள் சென்று வருவது போல ஓட்டுப்போடவும் சென்று வர அனுமதிக்கலாம்"

ஒரு குறிப்பிட்ட பகுதியின் அரசியல் கலாச்சார வரலாறு எதுவும் தெரியாத ஒரு நபர் அந்த மாநிலத்தை ஆளும் நபரை எப்படி தேர்ந்தெடுக்க அனுமதிக்க முடியும்?

நாட்டின் ஒரு குடிமகன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்களிக்க தேர்தலில் நிற்க உரிமை இருக்கிறது என கூறுபவர்கள் ஒடிசாவில் விகே பாண்டியனை குறிப்பிட்டு ஒரு தமிழன் எப்படி அந்த மாநிலத்தை ஆள முடியும் என்கிற தேர்தல் பிரச்சாரத்தை அமித் ஷா வைத்தபோது ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்று கேள்வியை முன்வைக்கிறார்.

இந்த SIR என அழைக்கப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை பொறுத்தவரை எல்லா மாநிலங்களும் இதே பிரச்சினைக்காக எதிர்ப்பது கிடையாது. தமிழ்நாடு, கேரளா, போன்ற தென் மாநிலங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை இணைப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்தால், மேற்கு வங்கம், மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் பீகார் போல அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் வங்கதேச எல்லையோர இருக்கக்கூடிய மாநிலங்களில் வங்கதேசத்தினர் அதிகளவில் இருப்பதாக தொடர்ந்து பாஜக வைக்கும் குற்றச்சாட்டை தொடர்ந்தே இந்த திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாஜக பலவீனமாக இருக்கும் இடங்களில் பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் நீக்கப்படலாம் என்பது திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

எழும் கேள்விகள்:

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தேர்தல் ஆணையம் நீக்கப்படும் வாக்காளர்கள் தங்களை இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க தவறுவதாலே நீக்கப்படுவதாக கூறப்படும் பட்சத்தில் அப்படி நீக்கப்படும் நபர்களின் குடியுரிமை என்னவாகும் என்பது தொடர்பான அடுத்த கேள்விகள் எழுப்பப்படுகிறது.

வாக்காளர்கள்

அதேபோல தற்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இது பிற மாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மற்ற மாநிலங்களவை உள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதே தெரியாத நிலையில் பட்டியலில் அவர்களுடைய பெயர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்கிற அடுத்த கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் சார்பாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் தொடர்பாக ஆட்சேபனையை தெரிவிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் அதுதொடர்பாக பெறப்படும் ஆட்சேபணைகளின் விவரங்களையும் தினசரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

நாடு முழுவதும்..

பீகாரை தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தயாராகுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பொழுது ஒவ்வொரு பகுதிகளிலும் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நேற்று ராகுல் அளித்த பேட்டியும் பெரிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியல் விவகாரத்தை தமிழக அரசியல் கட்சிகள் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..