பீகார் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் | துப்பாக்கி முனையில் அரசுப் பள்ளி ஆசிரியர் கடத்தல்.. பெண்ணுடன் கட்டாய திருமணமா?

பீகாரில் பணிக்குச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரைக் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

பீகார் மாநிலம் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுராவைச் சேர்ந்தவர், சுதாகர் ராய். இவரது மகன் அவ்னிஷ் குமார். அதேபோல், லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குஞ்சன். இந்த அவினாஷ் குமாரும், குஞ்சன் என்ற பெண்ணும் இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அவர்கள் இருவரும் ஹோட்டல், பார்க் எனப் பல இடங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்னிஷ் குமார் சமீபத்தில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிக்குச் சேர்ந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணிடமிருந்து விலகியுள்ளார். அதாவது, அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, அந்தப் பெண்ணிடம் உறவை முடித்துக்கொண்டு விலகிச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, நேற்று அவர் வழக்கம்போல் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு கார்களில் வந்த 12க்கும் மேற்பட்டோர் அவரை வழிமறித்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். பின்னர், அவருக்கும் குஞ்சனுக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, குஞ்சன் அவ்னிஷின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கிருந்து அவ்னிஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவ்னிஷின் குடும்பத்தினர், குஞ்சனை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து குஞ்சன், “அவர் என்னை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக உறுதியளித்தார். என்னையும் அவருடைய பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நான்கு வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். ஆனால் இதுபற்றி என் வீட்டாருக்குத் தெரிவித்து, நாங்கள் அவரைத் திருமணத்திற்கு அணுகியபோது, ​​அவர் மறுத்துவிட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தை அவ்னிஷ் குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “அந்தப் பெண் மீது எனக்கு காதல் இல்லை. பலமுறை போன் செய்து அவர் என்னை வழிமறித்து துன்புறுத்தினார். சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த என்னை சிலர் வாகனத்தில் கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை அடித்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்தனர். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர்கள் விடவில்லை” என தெரிவித்துள்ளார்.

பீகாரில் திருமணமாகாத, அதிலும் அரசுப் பணியில் உள்ள ஆண்களைக் குறிவைத்து துப்பாக்கியால் மிரட்டி கட்டாயமாகவே திருமணம் செய்துவைக்கப்படுவதாக போலீஸ்சார் தெரிவிக்கின்றனர். இதன் பெயர், ’பகத்வா விவா’ எனக் கூறப்படுகிறது. ”கடந்த 30 ஆண்டுகளில் நடப்பாண்டில் மட்டும் அதிகளவில் கட்டாயத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறைய ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.