இந்தியா

’நாளை ஆணுறை கேட்பீர்கள்...’ ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Abinaya

பீகாரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர் , ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர், ”அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்” என்ற கருத்தரங்கில் பங்கேற்றுக் கலந்துரையாடினார்.

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுரிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்டனர். அதில் ஒரு மாணவி, ‘’அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத், ‘நீங்கள் இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள். நாளை ஷூ வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் வேண்டும் என்பீர்கள். இறுதியாக குடும்ப கட்டுப்பாடு என்று இலவச ஆணுறை அரசு தர வேண்டும் என்பீர்கள். இந்த எண்ணம் தவறானது’ ’ என்று அந்த மாணவிக்குப் பதிலளித்தார்.

உடனே அந்த மாணவி, ‘ அரசுக்கு வாக்களித்து தேர்வு செய்வது மக்கள் தானே? தேர்தலின்போது எண்ணற்ற வாக்குறுதிகளை அரசு அளித்து வருவதாக' பதில் கூறினார். இதற்கு ஹர்ஜோத் கவுர் , ‘இப்படியெல்லாம் நினைத்ததுக்கொண்டிருந்தால், நீங்க வாக்களிக்கவே வேண்டாம். பாகிஸ்தான் போலவே மாறிவிடலாம். நீங்கள் வாக்களிப்பது பணத்துக்காகவா அல்லது சேவைக்காகவா? ‘’ என கோபமாகப் பதிலளித்தார்.

மாணவியிடம் , ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் இப்படி அநாகரிகமாகப் பேசியது தற்போது பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது. இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் ஹர்ஜோத் கவுரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.