ஜன் சுராஜு கட்சிக்கு ரூ.1000 நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டார்.
பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கூட்டணி சார்பில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் நேற்று பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றனர். தவிர கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னும் சிலரும் நேற்று அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு இன்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூகவாதியும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார். அவர் கட்சியைச் சேர்ந்த இருவர் மட்டுமே டெபாசிட் பெற்ற நிலையில், மற்ற யாவரும் டெபாசிட் கூட பெற முடியவில்லை. அவருடைய தோல்வி, பீகார் தேர்தலில் மட்டுமல்ல, நாடு முழுவதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஜன் சுராஜு கட்சிக்கு ரூ.1000 நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறியதை அடுத்து, கட்சி தோல்வியடைந்த போதிலும், தனது கட்சியின் முன்முயற்சிகளின் கீழ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பீகார் மக்களுக்காக தாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தான் சம்பாதிக்கும் தொகையில் குறைந்தது 90 சதவிகிதத்தை ஜன் சுராஜ் கட்சிக்கு நன்கொடையாக வழங்குவேன். என் குடும்பத்திற்கு டெல்லியில் ஒரு வீட்டைத் தவிர, கடந்த 20 ஆண்டுகளில் சம்பாதித்த எனது சொத்துக்கள் அனைத்தையும் இந்த முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறேன். பணப் பற்றாக்குறை காரணமாக இந்த முயற்சி நின்றுவிடாது. பீகார் மக்கள் ஜன் சுராஜுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 நன்கொடை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.