இந்தியா

பீகார் புலம்பெயர் தொழிலாளி மகள் சாதனை... கேரளப் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம்

webteam

கேரள மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள பீகார் புலம்பெயர் தொழிலாளியின் மகள் பாயல்குமாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசி மூலம் மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம், ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள கோசைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமோத் குமார் சிங். 19 ஆண்டுகளுக்கு முன்பு அவர், பிழைப்பைத் தேடி கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தார். தற்போது அவர் கங்காரபாடி கிராமத்தில் வசித்துவருகிறார்.

மகள் பாயல்குமாரி படிப்பில் சுட்டியாக விளங்கினார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 83 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ தேர்வில் 95 சதவீத மதிப்பெண்களும் பெற்றார். பின்னர் அவர் பெரும்பாவூரில் உள்ள மார் தோமா மகளிர் கல்லூரியில் பிஏ தொல்லியல் மற்றும் வரலாறு படித்துவந்தார். தற்போது இறுதியாண்டுத் தேர்வில் 85 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

"கல்லூரியில் கட்டணம் கட்டுவதே பெரிய பிரச்னையாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் ரூபாய் என்னால் கட்டமுடியாது. ஆனால் சில நல்ல உள்ளங்களின் உதவிகள் கிடைத்தன" என்று கடந்தவந்த பாதையை நினைவுகூரும் மாணவி பாயல்குமாரிக்கு சிவில் சர்வீஸ் தேர்வுதான் கனவாக இருக்கிறது.