இந்தியா

”2 கோடி சொத்துக்களை யானைகளுக்கு எழுதி வைக்கப் போகிறேன்” - பீகாரில் ஒரு பாசக்கார மனிதர்

”2 கோடி சொத்துக்களை யானைகளுக்கு எழுதி வைக்கப் போகிறேன்” - பீகாரில் ஒரு பாசக்கார மனிதர்

jagadeesh

தனது சொத்துக்களை ஒருவர் யானைகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் முன்பு கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி மருந்துகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்டு, வாய் வெடித்து 2 வாரம் காலமாகப் பட்டினியால் கிடந்து ஆற்றில் உயிரைவிட்டது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. திரைப் பிரபலங்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை உயிரிழந்த யானைக்காக நீதியைக் கேட்டனர். அப்போது அனைவரும் மனிதர்களின் குணம் குறித்த கேள்வியை முன்வைத்தனர், மனிதாபிமானம் மரித்துப்போனதாகச் சாடினர். இதனால் ஒட்டுமொத்த மனித இனமே குற்றத்தால் துடித்தது. ஆனால் இதற்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் விதமாகப் பீகாரிலிருந்து ஒரு நற்செய்தி வந்து இருக்கிறது.

பீகாரைச் சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் யானைகளுக்காக அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் தான் செல்லமாக வளர்க்கும் மோதி மற்றும் ராணி என்ற யானைகளுக்காகத் தனது நிலத்தை அவற்றின் பெயரில் எழுதி வைக்க இருக்கிறார். இவர் யானையின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகச் சொத்தையே எழுதி வைக்கும் அளவுக்குச் சென்றுள்ளார் அக்தர் இமாம். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அக்தர் இமாம் யானைகளுக்காக அரசு சாரா அமைப்பை நடத்தி வருகிறார். அங்கு மோதி என்ற 15 வயது யானையும், ராணி என்ற 20 வயது யானையும் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மரணத்திற்குப் பிறகு இரு யானைகளும் அனாதைகளாக ஆகி விடக்கூடாது என்று கூறியுள்ள அக்தர் இமாம், தனது நிலத்தை யானைகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள அக்தர் இமாம் கூறுகையில் " மிருகங்கள் மனிதர்களைப் போல கிடையாது. அவை மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை. நான் யானைகளைப் பல ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறேன். என் மரணத்துக்குப் பிறகு அவை அனாதை ஆகி விடக்கூடாது. அவற்றை எனது பிள்ளைகளைப் போலக் கவனித்து வருகிறேன். யானைகள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது" எனத் தெரிவித்தார்.

மேலும் யானைகள் குறித்துப் பேசிய அவர் " எனது நிலத்தை மோதி, ராணியின் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளேன். இவை 2 கோடி ரூபாய் மதிப்பு உடையவை. என்னைப் பலமுறை நான் வளர்த்த யானைகள் காப்பாற்றியுள்ளன. ஒருமுறை ரவுடிகள் என்னைக் கொல்ல முயன்றனர். அந்த நேரத்தில் எனது யானைகள்தான் என்னைக் காப்பாற்றின. என்னைக் கொல்வதற்காக துப்பாக்கிகளுடன் எனது அலுவலகத்திற்கு எனது எதிரிகள் வர முயன்றனர். அதுபற்றி யானைகள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால் நான் தப்பித்தேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.