இந்தியா

ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடம் - நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்

கலிலுல்லா

பீகார், ஜார்க்கண்ட், உ.பி., ஆகியவை இந்தியாவின் ஏழ்மை மாநிலங்கள் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தை பிடித்துள்ளன.

நிதி ஆயோக்கின் (NITI Aayog's Multidimensional Poverty Index (MPI)) அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தில் தான் 51.91 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவீத மக்களும், உத்தரபிரதேசத்தில் 37.79 சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய பிரதேசத்தில் 36.65 சதவீத மக்களும், மேகாலயாவில் 32.67 சதவீத மக்களும் வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பதாக நிதி அயோக் அறிக்கை கூறுகிறது.

இந்த பட்டியலில், கேரளா (0.71 சதவீதம்), கோவா (3.76 சதவீதம்), சிக்கிம் (3.82 சதவீதம்), தமிழ்நாடு (4.89 சதவீதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவீதம்) ஆகிய மாநிலங்களின் வறுமை குறியீடு குறைந்த அளவிலேயே உள்ளது. இந்த மாநிலங்கள் யாவும் வறுமை மிகுந்த மாநிலங்கள் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.

சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் போன்ற 12 அம்சங்களின் அடிப்படையிலும் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.