இந்தியா

“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு

“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு

webteam

பீகார் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை அளிப்பதில் போதிய திறமை இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு கண்டறிந்துள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முசாபர்பூரில் 113 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பீகார் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பீகார் மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க சரியாக திறன் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற எய்ம்ஸ் மருத்துவர்கள், “பீகார் மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களுக்கு சிடி ஸ்கேன்,வென்டிலேட்டர் முதலியவற்றை பயன்படுத்த தெரியவில்லை. அத்துடன் இந்த மருத்துவர்களுக்கு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி சரியான முறையில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது போதிய தெளிவில்லை” எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும் மூளைக்காய்ச்சல் குறித்து பீகார் அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் இத்தகைய பெரிய இழப்பிற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஜூன் மாதத்திற்கு முன்பே மூளைக்காய்ச்சல் பாதிப்பு பீகார் மாநிலத்திலிருந்தும் அது பற்றிய விழிப்புணர்வு அதிகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.