Bihar Flood ANI
இந்தியா

பீகாரில் வெள்ளம்.. மக்கள் கடும் பாதிப்பு.. நடந்தது என்ன?

கனமழை காரணமாக, பீகார் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், அங்கு தற்போது பெருமழை பெய்து, மக்களை வாட்டி வதை்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, நேபாளத்தில் உள்ள கண்டக் நதியில், பெருமளவு பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன்காரணமாக, இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நேபாளம் நாட்டில் உள்ள கண்டக் நதிப் படுகையில் பெய்த கனமழையால், பீகாரில் பாயும் கண்டக் நதியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Bihar Flood

நதியின் கரைகள் பல இடங்களில் உடைந்துவிட்டதால், பீகாரின் 6 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு சம்பாரண், சரண், கோபால்கஞ்ச், முசாபர்பூர் ஆகிய மாவட்டங்கள், இந்த வெள்ளப் பெருக்கால், பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, வால்மீகி நகரில் அமைந்துள்ள கண்டக் அணையில் இருந்து சுமார் 5.5 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பகாஹா பகுதியில் பாயும் கண்டக் நதியின் நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 91.25 மீட்டர் என்ற புதிய உச்சததை எட்டியுள்ளது.

இதேபோல், சரண் மாவட்டத்திலும்,கோபால்கஞ்ச் மாவட்டத்திலும், நதிக்கரைகள் உடைந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதுடன், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாப்ரா - சத்தர்காட் வழித்தடம், அரேராஜ் - ஹாஜிபூர் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் காரணமாக, சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கண்டக் நதியைத் தொடர்ந்து கங்கை நதியிலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாட்னா - பெகுசராய் - ககாரியா ஆகிய பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். பலவீனமான நதிக்கரைகளைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் குழுவினர் தொடர்ந்து களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.