செய்தியாளர் - ராஜ்குமார்.ர
இமயமலையில் உள்ள பனிப்பாறை உடைந்துசில நாட்களுக்கு முன்பு, ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பெருவெள்ளத்தில் சிக்கி 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை. இதையடுத்து, நேபாளத்தை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிகாரில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்குக்கு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமல்ல என்று அம்மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிகார் மாநில வானிலை ஆய்வு மையம் (DMD) தகவல் படி பாகல்பூரில் உள்ள சுல்தான்கஞ்சில் கங்கை நதியின் நீர்மட்டம், 36.78 மீட்டராகப் பதிவாகியுள்ளது. இது, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதிவான முந்தைய அதிகபட்ச வெள்ள நீர் மட்டமான 36 மீட்டரைத் தாண்டியுள்ளது இதன் காரணமாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கங்கை மட்டுமின்றி, நேபாளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து பாயும் கண்டக், கோசி, திகா, ஹதிதா உள்ளிட்ட முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் தகவல்களின்படி, பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பாகல்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 40 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், சந்தைகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.