பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எதிரணியான மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிபிஐ மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கட்சி 2 இடங்களிலும், சிபிஎம், ஐஐபி தலா 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பிஹாரில் தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தற்கு சில விஷயங்கள் முக்கிய காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன.
முதல்வர் நிதிஷ் குமாரின் நிர்வாகத் திறனும், தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சியும் வெற்றிக்கான முழு முதற்காரணமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், இந்த தேர்தலில் உண்மையான கேம் சேஞ்சர்கள் பெண் வாக்காளர்கள் தான் என தெரியவருகிறது.
சட்டம்-ஒழுங்கு மேம்பாடு, கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்களுக்கான ஜீவிகா மகளிர் நலதிட்டங்கள் மூலம் கிடைத்த பலன்கள் காரணமாக, பெண்களின் வாக்கு கொத்து கொத்தாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிட்டியுள்ளது. மேலும், சிராக் பஸ்வான் போன்ற தலைவர்களுடன் கூட்டணியை விரிவுபடுத்தி, எந்தச் சமூகமும் விடுபடாமல் இருக்கச் செய்த வியூகம் வெற்றிக்கான சிறந்த அஸ்திவாரமாக அமைந்தது. மொத்தத்தில், நலத்திட்டங்கள், சமூக சமன்பாடு, மற்றும் பா.ஜ.க.வின் பலம்—இவை அனைத்தும் இணைந்துதான் எதிர்க்கட்சிகளை தூக்கி எறிந்து, மீண்டும் நிதிஷ்-மோடி கூட்டணியை பீகார் அரியணையில் அமர வைத்திருக்கிறது.
பிஹாரில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் போராடி வெற்றி பெற்றார். லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரியமான ராகோபூர் சட்டமன்றத் தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி கொண்டார். ராகோபூர் தொகுதியில், தேஜஸ்வி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் சதீஷ் குமாரை தோற்கடித்திருந்தார். இந்தத் தேர்தல் முடிவும் அதையே மீண்டும் உறுதி செய்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகுவா தொகுதியில், RJD தலைவரான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும் ஜன்ஷக்தி ஜனதா தளம் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இத்தொகுதியில் LJP வேட்பாளர் சஞ்சய் குமார் சிங், RJD வேட்பாளர் முகேஷ் குமார் ரௌஷனைக் 44,997 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தேஜ் பிரதாப் யாதவ் 35,703 வாக்குகளைப் பெற்றார். RJD-யிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜன்ஷக்தி ஜனதா தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய தேஜ் பிரதாப், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற முடியவில்லை.
பீகார் அரசியலில் போஜ்புரி பிரபலங்கள் பலர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட 25 வயது பாஜக வேட்பாளர் மைதிலி தாக்கூர், மேலும் பலரின் முகங்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளார். காரணம், தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்னதாக, மைதிலி மரபார்ந்த, இரட்டை அர்த்தமற்ற நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் ஏற்கனவே உள்ளூரிலும், சமூக வலைதளங்களிலும் பிரபலமடைந்து இருந்தார்.
குறிப்பாக பாரம்பரிய இசையுடன் நாட்டுப்புற போஜ்புரி இசையை கலந்து அவர் பாடி, சமூக ஊடகங்களில் பல மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது அவர் வெளியிட்ட ராம் பஜன் வீடியோக்களும் அவரது புகழைப் பல மடங்கு உயர்த்தின. வெறும் கலாச்சார பாடல்கள் மட்டுமின்றி, சினிமா பாடல்கள் பாடியும் ரசிகர்களை தன் குரலால் கட்டிப்போட்டவர். அவரது பாடல்களை கேட்ட ரசிகர்கள், நீங்கள் அரசியலுக்கு செல்ல வேண்டாம்... ஒருவேளை நீங்கள் வென்று விட்டால் ஒரு நல்ல கலைஞரை நாங்கள் இழந்து விடுவோம், என கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் சொன்னது போலவே பிஹாரில் இதுவரை பாஜக ஜெயித்திடாத, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கோட்டையில் நின்று வெற்றி முகமாக அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த மைதிலி தாக்கூர்...
பிஹாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் மூத்த அரசியல் தலைவர் நிதிஷ் குமாருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். பீகார் மாநில மக்களின் தேவையை நிதிஷ் குமார் பூர்த்தி செய்ய வேண்டும் என வாழ்த்துவதாக, தனது சமூக வலைப்பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதேவேளையில், தேர்தலுக்காக அயராது உழைத்ததாக இளந்தலைவர் தேஜஸ்வி யாதவையும் பாராட்டியுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசியல் வியூகத்தையே பிரதிபலிப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெற்றி பெறாதவர்களிடம் கூட நம்பிக்கையை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையமே நாட்டுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இண்டியா கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்தும் திறன் கொண்ட கட்சியே இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் எனக்கூறியுள்ள அது காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். பாஜகவை தங்கள் கட்சி தொடர்ந்து வீழ்த்தி வருவதால் மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்பதே சரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்காளத்தில் கடைசியாக நடந்த 6 தேர்தல்களிலும் பாஜகவை திரிணமூல் வீழ்த்தியுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. 1985ஆம் ஆண்டில் அவர் ஒரு முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1995ஆம் ஆண்டில் ஹர்னௌட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று தசாப்தங்களாக, சட்ட மேலவை வழியை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். ஆனால், 19 ஆண்டுகால முதல்வர் அனுபவம், ஆக்கப்பூர்வமான அரசியல் செயல்பாடுகள், தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் நிதிஷின் அரசியல் பயணம் நிலைத்திருக்கிறது.
பிஹாரில் ஜன் சுராஜ் கட்சி ஆதரவாளர் டுலார் சந்த் யாதவின் கொலை வழக்கில் கைதான கும்பலின் தலைவர் மற்றும் அரசியல்வாதியான ஆனந்த் குமார் சிங், மோகாமா தொகுதியில் வெற்றி பெற்றார். ஐக்கிய ஜனதா தள வேட்பாளரான இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட RJD வேட்பாளரான வீணா சிங்கை 28 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, ஆனந்த் சிங் 91 ஆயிரத்து 416 வாக்குகளைப் பெற்றார். மோகாமா தொகுதி, 1990 முதல் சிங் குடும்பத்தினரின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
பீகார் தேர்தல் வெற்றிக்கான புதிய ஃபார்முலாவை பிரதமர் மோடி கூறியுள்ளார். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன்பு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மஹிலா, அதாவது பெண்கள் மற்றும் யூத் இளைஞர்களே பீகார் தேர்தல் வெற்றிக்கான எம்.ஒய். ஃபார்முலா என்றார். வளர்ச்சி அரசியலை ஆதரிக்க வேண்டும் என்பதை பீகார் இளைஞர்களும், பெண்களும் நிரூபித்துள்ளனர் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.