தேஜஸ்வி pt web
இந்தியா

Bihar Election 2025 | திரும்பும் திசையெல்லாம் நெருக்கடி.. எப்படி சமாளிக்கப்போகிறார் தேஜஸ்வி?

பிகாரில் முந்தைய பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளை கைப்பற்றி அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். ஆனால் இந்த முறை திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியை சந்தித்து வருகிறது அந்தக்கட்சி.

PT WEB

பிகாரில் முந்தைய பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளை கைப்பற்றி அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். ஆனால் இந்த முறை திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியை சந்தித்து வருகிறது அந்தக்கட்சி. எப்படி சமாளிக்கப்போகிறார் தேஜஸ்வி யாதவ் என கேள்விகள் மேலோங்கும் நிலையில், என்னென்ன பிரச்சினைகள் அவருக்கு இருக்கிறது. விரிவாகப் பார்க்கலாம்....

பிகார் தேர்தல் தொடர்பான விரிவான EXPLAINERகளை இந்த சுட்டியில் காணலாம்

தேஜஸ்வி யாதவ்

தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான தேர்தல் உத்திகளுக்கு மத்தியில், தங்களின் பலத்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் 35 வயது தேஜஸ்வி யாதவ். தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் திடீரென அரசியல் பிரவேசம் எடுத்துள்ளது மஹாகத்பந்தன் கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்வியின் குடும்பத் தொகுதியான ரகோபூரில் தனது பரப்பரையை தொடங்கியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். கடந்த முறை ரகோபூரில் பாரதிய ஜனதா வேட்பாளர் சதீஷ் குமாரை 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் தேஜஸ்வி. இருவரும் ஓரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இந்த முறை போட்டி பலமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கிடைய பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர் வேறு வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக MY எனப்படும் இஸ்லாமியர்-யாதவர் வாக்குகளை பெறுமளவுக்கு எதிர்நோக்கும் தேஜஸ்வி யாதவுக்கு, ஓவைசியின் AIMIM கட்சி சிக்கலை உருவாக்குகிறது. யாதவர்களுக்கு அடுத்தபடியாக பிஹாரில் அதிகம் உள்ள இஸ்லாமியரின் வாக்குகளை மடைமாற்றும் ஓவைசின் போட்டிக்களம் மகா கூட்டணியின் வெற்றிக்கு மற்றுமொரு அச்சுறுத்தல்.

தேஜஸ்வி யாதவ்

இப்படி பிற கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள் ஒருபுறம் இருக்க, தேஜஸ்வியின் குடும்பத்திற்குள்ளேயே பெரும் குழப்பம் நிலவுகிறது. சகோதரி ரோகிணி ஆச்சார்யா ஒருபுறம் குழப்பம் விளைவிக்க, மற்றொருபுறம் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் தனிக்கட்சியே தொடங்கி வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையே முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை ஒருமனதாக அறிவிப்பதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-க்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்தையும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே தொகுதி பேரம் படியாத சிபிஐ-எம்.எல் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து பின்னர் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. கடந்த முறை நூலிழையிலேயே ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ராஷ்ட்ரிய ஜன தளம் இழந்ததை இங்கே நினைவு கூர வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சியின் நலத்திட்டங்கள், வாக்கு உடைப்பு, குடும்ப பிரச்சினை, கூட்டணிக்குழப்பம் என வரும் தடைகளை எல்லாம் தேஜஸ்வி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை காண தேர்தல் களம் காத்திருக்கிறது.