பீகாரில் பாரதிய ஜனதா - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதும், காங்கிரசின் வீழ்ச்சியால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 55 மையங்களில் காலை 8 மணி முதலே விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதலில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள 'மகா கூட்டணி' வெற்றி முகம் காட்டியது. பின்னர் இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பாதையில் முன்னேறியது. நள்ளிரவைக் கடந்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அனைத்து தொகுதிகளின் முடிவுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் ஆனது.
அதன்படி, 110 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களிலும், 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. விகாஸ் ஷீல் இன்சான் கட்சி, இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா கட்சிகள் தலா 4 இடங்களைக் கைப்பற்றின. ஆட்சியமைக்க 122 இடங்களே தேவை என்ற நிலையில், 125 இடங்களுடன் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
எதிர்த்தரப்பான மகா கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியது. தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதா தளம், மாநிலத்திலேயே தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் காங்கிரஸின் வீழ்ச்சி என்றே சொல்லப்படுகிறது.70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒவேசியின் AIMIM கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தொகுதிகள் தவிர பிற இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ஒவேசியின் கட்சி பெற்ற வாக்குகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 இடங்களை வசப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றியை ருசித்துள்ளார்.
மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வாக்குகளை பிரித்ததில் இக்கட்சிக்கு முக்கிய பங்கிருக்கிறது