இந்தியா

பாஜக-லோக்ஜனசக்திதான் பீகாரில் ஆட்சியமைக்கும்: சிராக் பாஸ்வான்

Veeramani

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியுமா என லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் சவால் விடுத்துள்ளார், மேலும் பாஜக-லோக்ஜனசக்தி கூட்டணிதான் அடுத்ததாக பீகாரில் ஆட்சியமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான், முதல்வர் நிதிஷ் குமார் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளார். வரவிருக்கும் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் போட்டியிடவேண்டும் என  சவால் விடுத்துள்ள அவர்,  2005-க்குப் பிறகு ஏன் பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார்  போட்டியிடவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய சிராக் பாஸ்வான், "எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மக்களவைத் தேர்தலில் ஒன்பது முறை வெற்றி பெற்றார். அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்து கொள்ள 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிட வேண்டும். நிதிஷ் குமாருக்கு மாநில மக்களுடன் நேரடி தொடர்பு இல்லை, அவர் ஒரு "திமிர்பிடித்த" நபர். எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வான்  நிதிஷ்குமாரால் அவமானப்படுத்தப்பட்டபோது மிகவும் மோசமாக உணர்ந்தேன். 2019 மக்களவைத் தேர்தலின்போது எல்ஜேபி வேட்பாளர்களை தோற்கடிக்க நிதிஷ் குமார் முயன்றார்” என அவர் குற்றம்சாட்டினார். நிதிஷ்குமார் உடனான கருத்துவேறுபாடு காரணமாக லோக்ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி , பீகார் தேர்தலில்  143 இடங்களில் போட்டியிடுகிறது.

” நான் நிதிஷ் குமாருக்கு மிகவும் இளையவன், ஆனால் நான் தனியாக தேர்தலில் போராட தயாராக இருக்கிறேன்,  ஆனால் அவர் ஏன் தனித்து நிற்கவில்லை. நிதிஷ் குமாரை நான் நம்பவில்லை, ஏனென்றால் அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தால், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலமாகும். பாஜக, பீகாரில் மணிப்பூர் ஃபார்முலாவை பிரதிபலிக்க வேண்டும். வரும்  சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் தனது வேட்பாளர்கள் அனைவரும் பாஜக முதல்வரின் காவி கட்சியை ஆதரிப்பார்கள். நவம்பர்  10 இல் பீகார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, மாநிலத்தில் பாஜக-எல்ஜேபி அரசாங்கம் இருக்கும்” என்று நம்புவதாக சிராக் பாஸ்வான் கூறினார்.