இந்தியா

“வேலையே செய்யல சம்பளம் எதற்கு”.. ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த ஆச்சர்ய பேராசிரியர்!

“வேலையே செய்யல சம்பளம் எதற்கு”.. ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த ஆச்சர்ய பேராசிரியர்!

JananiGovindhan

கொரோனா காலகட்டத்தில் மூன்று வருடங்கள் பாடங்கள் ஏதும் எடுக்காததால், பீகாரை சேர்ந்த பேராசிரியர் தனது 24 லட்ச ரூபாய் ஊதியத்தை திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார். இவர் செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததில் இருந்து அவர் பெற்ற மொத்த சம்பளமான ரூ.23,82,228 லட்சத்துக்கான காசோலையை பிஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் திருப்பி அளித்து உள்ளார்.

ஏனெனில், கடந்த 33 மாதங்களில் எந்த மாணவரும் ஒரு வகுப்பிற்குக்கூட வரவில்லை. யாருக்கும் கற்றுத் தராமல் சம்பளத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள மனசாட்சி அனுமதிக்கவில்லை எனக் கூறி லாலன் குமார், கடந்த ஜூலை 5ம் தேதி பதிவாளரிடத்தில் காசோலையை வழங்கியிருக்கிறார்.

முதலில் வாங்க மறுத்த பதிவாளரிடம், “கற்பிக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை” என்றும், “கொரோனா ஊரடங்கின் போது ஆன்லைன் வகுப்புகளின் போது கூட இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ஐந்து வருடங்கள் கற்பிக்காமல் சம்பளம் வாங்கினால், அது நான் கற்ற கல்வி மரணமடைவதற்கு சமமாகும்.” எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகே லாலன் குமாரின் காசோலையை வாங்கியிருக்கிறார்கள்.

நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மனோஜ் குமாரிடம், லாலன் குமார் தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்ததன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முதுகலை துறைக்கு இடமாற்றம் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்க லாலன் குமார் முயற்சித்து வருவதற்கான தந்திரம் என சாடியிருக்கிறார்.

முன்னதாக, லாலன் குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் மற்றும் M.Phil பட்டமும் முடித்தவராவார். தன்னுடைய முடிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லாலன் குமார், கல்லூரியில் கல்வி கற்கும் சூழலை தான் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.