bihar borewell ani
இந்தியா

பீகார்: 40அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை; ஆக்ஸிஜன் வசதியுடன் மீட்பு பணிகள் தீவிரம்

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்கான மீட்புப் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Prakash J

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில், இன்று (ஜூலை 23) மூன்று வயது குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்கான மீட்புப் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அக்குழந்தையின் தாயார், “நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதே இடத்தில் என் மகனும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கால் தவறி அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்” என்றார்.

bihar borewell

இதுதொடர்பாக காவல் துறையினர், “குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையை மீட்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். மீட்புக் குழு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளது. குழந்தை இன்னும் உயிருடன் உள்ளது, அவரது குரலை நாங்கள் கேட்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், “மீட்பு நடவடிக்கையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவக் குழுக்களும் இடத்தில் உள்ளன" எனத் தெரிவித்துள்ளனர்.

ANI செய்தியின்படி, “இந்த ஆழ்துளைக் கிணறு இங்குள்ள விவசாயி ஒருவரால் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு போரிங் வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர் வேறோரு இடத்துக்கு போரிங் போடச் சென்றுவிட்டார். எனினும், இந்த போர்வெல் மூடப்படவில்லை. இந்த போர்வெல் உரிய முறையில் மூடப்படாததால்தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது” எனத் தெரிவிக்கிறது.

bihar borewell

குழந்தையை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பல மூத்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட, பெண் குழந்தை அங்கு இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.