பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் பீகாரில், என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ. என்.ஆர்.சி உள்ளிட்டவை குறித்து பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், என்.பி.ஆர் எனப்படும் மக்கள்தொகை பதிவேட்டில் சர்ச்சைக்குரிய பிரிவுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். மேலும் 2010-ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டபடியே மக்கள்தொகை பதிவேடு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலின்பேரில், பீகார் மாநிலத்திற்கு என்.ஆர்.சி தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 54 பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றப்படும் முன்பு பேசிய முதல்வர் நிதிஷ்குமார், என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 2010-ஆம் ஆண்டில் இருந்த வடிவத்தைப் போலவே பின்பற்றப்போவதாக உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பீகாரில் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்றும் இது குறித்து மத்திய அரசுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பாஜக ஆதரவுடன் ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் முதல்முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.