இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல்... இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!

பீகார் சட்டமன்ற தேர்தல்... இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!

kaleelrahman

பீகாரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


வடக்கு பீகாரில் இருந்து சம்பரான் மாவட்டம் அமைந்திருக்கும் மேற்கு பகுதி வரையிலான 15 மாவட்டங்களில் உள்ள 78 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்து இரு கட்ட தேர்தலை போன்று, மூன்றாவது கட்டத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அதே நேரம் சில தொகுதிகளில் லோக்ஜனசக்தி, அசாது தீன் ஒவாசியின் அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி, மற்றும் பப்பு யாதவ் கட்சியும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார், சபாநாயகர் மற்றும் 12 அமைச்சர்கள் உள்பட 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் 35 வேட்பாளர்களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 37 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மெகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 46 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 25 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத் தேர்தல் முடிவடைந்ததும், வரும் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.