பிகார் தேர்தல் PT Web
இந்தியா

பிகார் தேர்தல்| குறைந்த தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகள்.. காங்கிரஸுக்கு வேட்டு!

பிகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலை விட, இந்த முறை குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

PT WEB

பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைவிட, குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிகார்

கடந்த முறை 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்த முறை 135 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. சென்ற முறை 70 தொகுதிகளில் களம் இறங்கிய காங்கிரஸ், இந்த முறை 50க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்துள்ள விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, 20 தொகுதிகளை கேட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளது. கடந்த முறை 19 தொகுதிகளில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்ற இந்த கட்சி, இந்த முறை தங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளையும் கேட்டுள்ளன. இந்நிலையில், கடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, குறைந்த தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வலியுறுத்துவதாக தெரிகிறது.

தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறையவும், சிறிய கட்சிகள் களம் காணும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுமான சூழல் ஏற்பட்டுள்ளது.