இந்தியா

ஒரேநாளில் 80 பேரை கடித்த தெருநாய்! ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயென தெரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்

webteam

பீகார் மாநிலம் அராவ் பகுதியில் தெருநாய் ஒன்று 80க்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் அராவ் மாவட்ட பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அப்பகுதி மக்களில் 80க்கும் மேற்பட்டவர்களை நேற்று கடித்துக் குதறியுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும், அராவ் மாவட்ட மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டதும் அந்த நாயைப் பிடிப்பதற்கு அரசு நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நாயைப் பிடிக்கும் குழுவினர் வருவதற்குள்ளேயே அந்த நாயை, உள்ளூர்வாசிகள் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நாய், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டது என்றும், அதனால்தான் அது பல பேரைக் கடித்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அராவ் மருத்துவமனையின் மருத்துவர் நவ்நீத் குமார் செளத்ரி, “நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் இந்த மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள், 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட பின் சரியான முதலுதவியும் சிகிச்சையும் எடுக்கவில்லை என்றால் இறப்பு நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.