இந்தியாவிலேயே முதன்முறையாக போபாலில் மாடுகளை அடக்கம் செய்ய தனி சுடுகாடு அமைக்கப்பட உள்ளது.
பொதுவாக கால்நடைகள் எதிர்பாராத சாலை விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தால் அவற்றை யாரும் அப்புறப்படுத்தி அடக்கம் செய்ய முன்வருவது கிடையாது. துர்நாற்றம் வீசி அதனால் சுகாதார கேடு ஏற்படும். இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக போபாலில் அகால மரணமடையும் மாடுகளை அடக்கம் செய்ய தனி சுடுகாடு அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள போபால் நகர மேயர் அலோக் ஷர்மா, “மாடுகள் எதிர்பாராத விபத்துகளிலோ அல்லது இயற்கைக்கு முரணான வகையிலோ உயிரிழக்க நேர்ந்தால் அவற்றை அடக்கம் செய்ய தனி சுடுகாடு அமைக்கப்பட உள்ளது” என்றார். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது. அப்போது இந்தத் திட்டத்தை கொண்டுவர பாஜக முயற்சி செய்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. தற்போது காங்கிரஸ் ஆட்சி அங்கு நடைபெற்று வரும் நிலையில், மாடுகளுக்கு தனிசுடுகாடு அமைக்கும் திட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
இதுகுறித்து அலோக் ஷர்மா மேலும் கூறும்போது, “ பசுக்கள் பால் கொடுக்கும் வரை அவற்றை கோமாதா என்றோ அம்மா என்றோ அழைத்து பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம். ஆனால் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தினால் தெருவோரம் விட்டுவிடுகிறோம்” எனக் கூறினார். முன்னதாக டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தெருவோர கால்நடைகளுக்காக தனி வசிப்பிடம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.