போபலில் சொகுசு கார் ஒன்றிலிருந்து கிலோ கணக்கான தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால் அருகே உள்ள வனப்பகுதியில் சொகுசு கார் ஒன்று வெகு நேரமாக சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த வருமானவரித்துறையினர், அந்த சொகுசு காரை ஆராய்ந்துள்ளனர்.
அந்த சொகுசு காரில் நிறைய பைகள் இருந்துள்ளன. மேலும் அந்த காரானது திறக்க முடியாமல் பூட்டப்பட்டிருந்ததால், வருமான வரித்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரின் உதவியுடன் சொகுசு காரை திறந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்த பைகளை சோதனை செய்தனர்.
அவர்கள் சோதனையில் அப்பைகளில் தங்கக் கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் இருந்ததைக் கண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளை எடை போட்டு பார்த்த போது 52 கிலோ தங்ககட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதன் தற்போதைய மதிப்பானது சுமார் 36 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும் சில பைகளில் இருந்த ரூபாயை எண்ணியப்பொழுது அதில் சுமார் 9.8 கோடி ரூபாய் ரொக்க பணமும் இருந்தது என வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தனை தங்கம் மற்றும் பணத்தை சொகுசு காரில் விட்டு சென்றது யார் என்று காவல்துறையினரும், வருமானவரித்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை வருமானவரி சோதனை அல்லது அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து யாரேனும் வனப்பகுதியில் காருடன் தங்கத்தையும் பணத்தையும் விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.