இந்தியா

தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம்: தலைநகர் டெல்லியின் நிலவரம் என்ன?

தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம்: தலைநகர் டெல்லியின் நிலவரம் என்ன?

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் தலைநகர் டெல்லியில் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லியில் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பொது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது; முக்கியமான வணிக நிறுவனங்கள் அடங்கியுள்ள பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மேற்குவங்கத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுப்போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில் வங்கிகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் பந்த் எதிரொலித்தாலும்கூட, தலைநகர் டெல்லியை பொருத்தவரை பந்த் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வழக்கம்போல பேருந்து மற்றும் ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படுகிறது. இதை போல் தனியார் வாகனங்களான கால் டாக்ஸி, ஆட்டோ, இ-ரிக்ஷா உள்ளிட்டவையும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இருப்பினும் பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளின் சேவைகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி தானியங்கி முறையில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் வசதிகள் சீர்படுத்தப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.