டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ள செவ்வாய்க்கிழமை 'பாரத் பந்த்' - முழு அடைப்புப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் பந்த்-தின் நிலை என்ன?
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் வீட்டிற்கு திரும்புவோம் என உறுதிபட கூறி 12-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்கின்ற விவசாயிகள், நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்திய அளவில் யாரெல்லாம் ஆதரவு?
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, திமுக, சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பகுஜன் சமாஜ் கட்சி (பிசிபி), இடதுசாரிகள் போன்ற அரசியல் கட்சிகள் விவசாயிகளின் அகில இந்திய வேலைநிறுத்த அழைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்க உள்ளன. விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களின் முழு ஆதரவு இருப்பதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால், பந்த் போராட்டம் என்பது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் மேற்கு வங்கத்தில் பந்தை ஆதரிக்காது எனக் கூறப்படுகிறது.
அதேபோல், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி.யூ.சி), ஹிந்த் மஜ்தூர் சபா (எச்.எம்.எஸ்), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யு), அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (ஏ.ஐ.டி.யூ.சி) மற்றும் ஒருங்கிணைப்பு மையமும் (டி.யூ.சி.சி) ஆகியவை விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை முழு அடைப்பில் கலந்துகொள்கின்றன. டெல்லி டாக்ஸி சுற்றுலா போக்குவரத்து சங்கம், டெல்லி மாநில டாக்ஸி சங்கம், கவுதமி ஏக்தா நலச் சங்கம் போன்ற பல தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் சேரவுள்ளன.
வங்கி நடவடிக்கைகள்?
பல வங்கி தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை டெல்லியின் சிங்குவா, அவுசாண்டி, பியா மனியாரி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டும் எனத் தெரிகிறது. விவசாயிகள் இந்த இடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததை அடுத்து, இந்தப் பகுதிகளில் மூடப்படுகின்றன. வட மாநிலங்களில் வேலைநிறுத்தத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில்...
அதேவேளையில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப்போவதில்லை என ஆளும் சிபிஎம் அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அடைப்பு போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அளித்துள்ள ஆதரவின் காரணமாக பெரும்பாலான ஆட்டோக்கள் நாளை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில் பயணத்தை முடக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ள ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றது.