இந்தியா

பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்பு

கலிலுல்லா

பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்க உள்ளார்.

பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்க உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர் கலனில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது. சுமார் 3 லட்சம் பேர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வருமாறும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 10 ஆயிரம் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.