இந்தியா

பஞ்சாபில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பகவந்த் மான்

பஞ்சாபில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பகவந்த் மான்

கலிலுல்லா

பஞ்சாபில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை நேரில் சந்தித்து உரிமை கோரினார்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இன்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், எங்கு வேண்டுமானாலும் பதவியேற்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டதாக கூறினார்.

இதையடுத்து சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலனில் வரும் 16ஆம் தேதி நண்பகல் 12:30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பகவந்த் மான் கூறினார். பஞ்சாப் முழுவதுமிருந்து மக்கள் பதவியேற்பு விழாவுக்கு வருவார்கள் என்றும், இதுவரை எடுக்கப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் தெரிவித்தார்.