"நிபுணர்கள் அனுமதி அளித்தால் பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம் சேர்க்கப்படும்" என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவானது நாடு முழுவதும் பெரும் விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் வித்திட்டுள்ளது.
பள்ளிப் பாடங்களில் மதச்சாயம் பூச குஜராத் அரசு முயற்சிப்பதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் பெரும்பாலான கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "பகவத் கீதை என்பது இந்துக்களுக்கானது மட்டும் கிடையாது. அது அனைவருக்குமான வேத நூல். அதில் மனிதர்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிகள் போதிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் பரிந்துரைத்தால், கர்நாடகாவிலும் பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை கட்டாயம் சேர்க்கப்படும். ஆனால், அது நடப்பாண்டில் இருக்காது. அடுத்த ஆண்டில் இருந்து வேண்டுமானால் இது நடைமுறைப்படுத்தப்படலாம்" எனக் கூறினார்.