Tinder
Tinder File Image
இந்தியா

’திட்டமிட்டு நம்பவைத்து மோசடி நாடகம்’ - டிண்டர் ‘காதலனிடம்’ ரூ.4.5 லட்சத்தை இழந்த பெங்களூர் பெண்!

Justindurai S

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயதான பெண் ஒருவர், பிரபல டேட்டிங் செயலியான டிண்டர் மூலமாக மும்பையை சேர்ந்த அத்விக் சோப்ரா என்ற நபருடன் பழகி வந்துள்ளார். லண்டனில் மருத்துவப் பயிற்சியாளராக இருப்பதாக அத்விக் சோப்ரா கூறியதை நம்பி, அப்பெண் அந்நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாற, அப்பெண்ணை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததுடன், லண்டனில் இருந்து துபாய் வழியாக பெங்களூரு வரவிருப்பதாக அத்விக் சோப்ரா கூறியிருக்கிறார்.

Tinder

இதுவரை ஆன்லைனில் மட்டுமே பழகி வந்த அத்விக் சோப்ராவை நேரில் காணும் ஆவலில் இருந்து வந்துள்ளார் அந்த பெண். இந்நிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த மே 17ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தான் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அத்விக் சோப்ரா டெல்லி விமான நிலையத்திற்கு கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்துள்ளதாகவும், எனவே அவரை இங்கிருந்து அனுப்புவதற்கு ஒப்புதல் கட்டணமாக ரூ.68,500 செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் கட்டணமாக ரூ.1.8 லட்சமும், செயலாக்கக் கட்டணமாக கூடுதலாக ரூ.2.06 லட்சமும் கட்ட வேண்டும் எனவும் மாற்றி கூறியிருக்கிறார்.

cyber crime bangalore

அத்விக் சோப்ரா மீதான கண்மூடித்தனமாக நம்பிக்கையால், அதிகாரி போல் பேசிய அந்த நபர் கேட்ட தொகையை, அவர் அளித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார் அப்பெண். இதையடுத்து மீண்டும் தொடர்புகொண்ட அந்த போலி அதிகாரி, ஜிஎஸ்டி கட்டணமாக மேலும் ஒரு 6 லட்ச ரூபாய் கேட்டதால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண், அதிகாரியை போல் பேசிய நபரிடம் துருவித்துருவி கேள்வி கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் அழைப்பை துண்டித்துவிட்டு தலைமறைவானார்.

அதன்பிறகே போனில் பேசிய நபர் போலியான அதிகாரி என்பது தெரியவந்தது. பின் அத்விக் சோப்ரா மீது சந்தேகமடைந்த அந்த பெண், அவரின் டிண்டர் ஐடிக்கு சென்று பார்த்தபோது அந்த அக்கவுண்ட் நீக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகே அத்விக் சோப்ராவால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்துள்ளார் அந்த பெண். இதனைத் தொடர்ந்து டிண்டர் ‘காதலனிடம்’ ரூ.4.5 லட்சத்தை இழந்த அந்த பெண் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.