இந்தியா

சதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

webteam

பெங்களூரில் தொழிலதிபரிடம் சதி செய்து மிரட்டி ரூ. 70 லட்சம் வரை பணம் பறித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் தொழிலதிபர் கிருஷ்ணதாஸ் என்பவரிடம் திண்டுலு என்பவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். திண்டுலு ராணி என்ற 39 வயது பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணி தனது குடும்ப பிரச்னைகளை திண்டுலுவிடம் கூறியுள்ளார்.

திண்டுலு மூலம் ராணி தொழிலதிபர் கிருஷ்ணதாஸுக்கு நன்கு பழக்கமாகியுள்ளார். இதையடுத்து தனது மகன் படிப்பு செலவுக்காக என்று கூறி கிருஷ்ணதாஸிடம், ராணி முப்பது ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதைதொடர்ந்து கணவனின் மருத்துவ செலவுக்காக 2.75 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. மேலும் சில நாட்கள் கழித்து தான் பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போவதாக கூறி 3 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ராணி. தொடர்ந்து மேலும் சில தேவைகளை கூறி ராணி பணம் கேட்ட போது இல்லை என கிருஷ்ணதாஸ் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராணி கிருஷ்ணதாஸுக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்துள்ளார். சமரசம் பேச வீட்டிற்கு வருமாறு கிருஷ்ணதாஸை ராணி அழைத்துள்ளார். இருவரும் சமரசமான நிலையில் திடீரென ராணியின் மருமகனும், சகோதரனும் போலீஸ் உடையில் ரெய்டு வந்து விபச்சார வழக்கு பதிய உள்ளதாக கிருஷ்ணதாஸை மிரட்டியுள்ளனர்.

இதைவைத்து கிருஷ்ணதாஸிடம் இருந்து 5 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இதையடுத்து சில மாதங்கள் கழித்து  இரண்டு பேர் வந்து கிருஷ்ணதாஸிடம் ராணி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் உங்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த வழக்கை முடிக்க கிருஷ்ணதாஸ் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அதே இரண்டு பேர் கிருஷ்ணதாஸை தொடர்பு கொண்டனர். அப்போது ராணி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்க உள்ளதாகவும் அதை தடுக்க 20 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். தனது சொத்துக்களை வைத்து பணத்தை திரட்டி கொடுத்துள்ளார் கிருஷ்ணதாஸ்.

இதைத்தொடர்ந்து ராணியின் மகள் பிரீத்தி தனது அம்மா கொலை குறித்து போலீஸில் புகார் அளிக்க போவதாக கூறி 20 லட்சம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது போலி போலீஸ் அதிகாரிகள் மேலும் 65 லட்சம் பணம் வேண்டும் என கிருஷ்ணதாஸை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 65 லட்சத்தை தயார் செய்து கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அனுப்பினர்.

அந்த பணத்தை கிருஷ்ணதாஸிடம் வாங்க வந்தபோது ப்ரீத்தி மற்றும் மறைந்திருந்த ராணியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராணியின் சகோதரன், மற்றும் மருமகனையும் கைது செய்தனர்.