இந்தியா

மைசூரு தசரா விழா: 10,000 கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட வீடு

JustinDurai
பெங்களூரில் இருக்கும் ஒரு வீட்டில் 10,000 கொலு பொம்மைகள் வைத்து பிரமாண்டமான முறையில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பெங்களூரு தியாகராஜா நகரில் உள்ள பாக்யலட்சுமி என்பவரது இல்லத்தில் மைசூரு தசரா விழாவை முன்னிட்டு வீடு முழுவதும் சுமார் 10,000 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கொலு பொம்மைகள், மகாபாரதத்தை கருப்பொருளாகக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியத்தின் படி கடந்த 60 ஆண்டுகளாக இதைச் செய்து வருவதாகவும், சில பொம்மைகள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் பாக்யலட்சுமி கூறுகிறார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் உள்ளது. மகிஷாசூரன் என்ற அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளையே மைசூரு மக்கள் தசராவாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 7ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த ஆண்டுக்கான தசரா விழா வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த தசரா விழாவை கண்டுகளிக்க கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடைபெறும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.