இந்தியா

பெங்களூரு டூ ஹவுரா: உணவகப் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் நிறுத்தப்பட்ட ரயில்

webteam

பெங்களூரில் இருந்து ஹவுரா வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் வேகமாக இறங்கினர். இதனால் குப்பம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக மேற்கு வங்காளம் ஹவுரா வரை செல்லும் வாராந்திர ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது உணவாகப் பெட்டியில் திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பெட்டிக்கும் புகை பரவியதால் உடனடியாக லோகோ பைலட் ரயிலை குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து குப்பம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே ஊழியர்கள் பங்காருபேட்டை பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு பணி வீரர்களை வரவழைத்து ரயில் முழுவதும் சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் உள்ள பிரேக்கிங் சிஸ்டத்தில் அதிக அளவு வெப்பம் காரணமாக புகை வந்துள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து 3 மணி நேரம் கழித்து குப்பம் ரயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளையும் ஏற்றிக் கொண்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் குப்பம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது