18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக, 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், ஆர்.சி.பி. அணி சார்பில் தலா ரூ.10 லட்சமும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ.5 லட்சமும் என மொத்தம் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நேற்று இரவு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது 11 பேர் பலியாக காரணமான போலீஸ் அதிகாரிகள், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-மந்திரியிடம் மந்திரிகள் வலியுறுத்தினா். இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பேரில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர், உதவி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.சி.பி. அணியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நிகில் சோசாலே, டி.என்.ஏ. நிறுவனத்தை சேர்ந்த சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல சரமாறியான கேள்விகளை முன்வைத்தது. மேலும், ஜூன் 15 ல் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.