இந்தியா

மீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு

rajakannan

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து  இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்திருந்தார்.  

அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினர். அதாவது ‘விஷ்மயா’ படப்பிடிப்பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னை தீண்டியதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் 5 பக்கத்திற்கு புகார் எழுதியிருந்தார்.

ஸ்ருதி ஹரிஹரன் புகாரை மறுத்திருந்த அர்ஜூன் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன் எனக் கூறியிருந்தார். அர்ஜூனுக்கு ஆதரவாக எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, தன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு  கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்தார்.

இதனிடையே, 2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், கன்னட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் அர்ஜூன் மீது பாலியல் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.