நரேஷ்புரி கோஸ்வாமி
நரேஷ்புரி கோஸ்வாமி  PT WEB
இந்தியா

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 250 பெண்களை ஏமாற்றிய முதியவர்; அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி!

விமல் ராஜ்

கோவையைச் சேர்ந்த ஒரு பெண், திருமண வலைதளம் மூலமாக வரன் தேடியுள்ளார். இவரைப் பெங்களூரில் வசிக்கும் நரேஷ்புரி கோஸ்வாமி (45) என்ற நபர் தொடர்பு கொண்டு தன்னுடைய பெயர், பவன் அகர்வால் என்று கூறி இளவயதுக்காரர் போல பேசியுள்ளார். ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகக் கூறி தன்னை அறிமுகம் செய்த கொண்டுள்ளார்.

இதனையடுத்து இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். பின்னர் நரேஷ்புரி கோஸ்வாமி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தப் பெங்களூர் வர வேண்டும் என அழைத்துள்ளார். இதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்த பெண்ணும் கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் வந்த அப்பெண், நரேஷ்புரி கோஸ்வாமியை தொடர்புகொண்டுள்ளார். அப்போது, "நான் வர முடியாத நிலையில் இருக்கிறேன். என் சித்தப்பாவை அனுப்புகிறேன்" எனக் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு, போன் செய்த ரேஷ்புரி கோஸ்வாமி "என் சித்தப்பா வெளியூருக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவுக்கும், செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. பர்ஸை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்துள்ளார். அவருக்குப் பணம் கொடுங்கள். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்" எனக் கூறியுள்ளார். பின்னர் அங்கு வந்த நபர் ஒருவர், நரேஷ்புரி கோஸ்வாமி சித்தப்பா என தன்னை அறிமுகம் செய்து கொண்டு பணத்தை வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு அழைத்துச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற, நபர் திரும்பவே இல்லை. நரேஷ்புரி கோஸ்வாமி செல்போனும் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் அந்த பெண்ணுக்குத் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பெண் ரயில்வே போலீசாரிடம் , புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நரேஷ்புரி கோஸ்வாமியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் போலியான மேட்ரிமோனி இணையதளத்தை உருவாக்கி, 250க்கும் மேற்பட்ட பெண்களுக்குத் திருமண ஆசை காட்டி, லட்சக்கணக்கான ரூபாய் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாகத் திருமணம் ஆகி, விவாகரத்தான பெண்களைக் குறி வைத்துள்ளார். அவர்களைத் திருமணம் செய்வதாக நம்ப வைத்து, பெங்களூருக்கு வரவழைத்து பணம் பறித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Face Book id

இதில், ராஜஸ்தான் - 56 பெண்கள், உத்தரப் பிரதேசம் - 32 பெண்கள், டில்லி - 32, கர்நாடகா - 17, மத்தியப் பிரதேசம் - 16, மகாராஷ்டிரா - 13, குஜராத் - 11 உட்பட, 250 பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல வேறு யாரையாவது ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? வேறு யாருடன் இவருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.