இந்தியா

பைக்கில் சாகசம் காட்டிய இளைஞர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீஸ் !

jagadeesh


பெங்களூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததாகக் கூறி இரண்டு இளைஞர்களைச் சாலையிலேயே கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும் இளைஞர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயமாக கொரோனாவிலிருந்து 19 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்றுக் குணமாகியுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.

பெங்களூரின் ஷாகரா நகரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோவில் பைக்கில் இரண்டு இளைஞர்கள் நின்றுகொண்டு போலீஸிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது முகத்தை மறைத்து ஹெல்மெட் போட்டிருக்கும் ஒரு போலீஸ் அந்த இளைஞர்களை ஓங்கி மிதிக்கிறார். பின்பு, போலீஸ் அல்லாத மாஸ்க் போட்ட நபர் ஒருவர் கையில் வைத்திருக்கும் கட்டையைக் கொண்டு இளைஞர்களைக் கடுமையாகத் தாக்குகிறார். அந்த இளைஞர்கள் வலியால் துடித்துப் போகிறார்கள்.

இதனையடுத்து உடனடியாக வந்த இன்னொரு போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்துகிறார். வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் பெங்களூரின் பாதராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பெங்களூரில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் பேர் இருக்கும் பகுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியின் இளைஞர்கள் ஷாகரா நகரில் நுழைந்தது மட்டுமல்லாமல் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பைக்கில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். அதனால் காவல்துறை தண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ இப்போது கடுமையான கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. இளைஞர்கள் தவறே செய்திருந்தாலும் அவர்களை இப்படி கடுமையாக மனிதாபிமானமில்லாமல் தாக்கக் கூடாது எனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் போலீஸார் யார் , மாஸ்க் அணிந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.