உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பொறியாளரான இவர், தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக, அவர் கைப்பட எழுதிய 24 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனது நிம்மதியை அவர்கள் கெடுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட சுபாஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்து பேசியிருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.