karnataka x page
இந்தியா

பெங்களூரு | ”வட இந்தியர்களை வெறுக்குறாங்க; வித்தியாசமா பாக்குறாங்க” - இணையத்தில் விவாதமான பதிவு!

கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தி மற்றும் பிறமொழி பேசும் நபர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

Prakash J

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு சமீபத்திய உதாரணமாக கர்நாடகா விளங்குகிறது. தவிர, அவ்வப்போது மொழிப் பிரச்னையிலும் சிக்கிக் கொள்கிறது. சமீபத்தில்கூட, ஐபிஎல் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம், கன்னட மொழியில் சமூக வலைத்தளத்தைத் தொடங்கியிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இது தவிர, அவ்வபோது கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தி மற்றும் பிறமொழி பேசும் நபர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த கார்ஸ்24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சோப்ரா, ’கன்னடம் பேசத் தெரியாவிட்டால் டெல்லிக்கே திரும்பி வாருங்கள்’ எனப் பதிவிட்டதும் இணையத்தில் விவாதங்களைத் தூண்டியது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவரிடம் ’வட இந்தியாவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற பிறகு அங்கு அனுபவிக்கும் பிரச்னைகள்’ என்ன எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அவர், “இங்குள்ள கலாசாரம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இங்குள்ளவர்கள் வட இந்தியர்களை வெறுக்கிறார்கள். அதைத்தான் நான் கவனித்து வருகிறேன். மேலும், நகரத்தில் உள்ளவர்கள் வட இந்தியர்களை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். சிலசமயங்களில், அவர்களை ’இந்திக்காரர்கள்’ என்றே அழைக்கின்றனர். நான் இந்த நகரத்தை முற்றிலும் நேசிக்கிறேன். மீண்டும் மீண்டும் இங்கே வந்து பார்க்க விரும்புகிறேன். ஆனால் நாங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் மக்கள் வித்தியாசமாக நடந்துகொள்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களிடம் அதிக கட்டணம் கேட்கிறார்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

வழக்கம்போலவே இந்த வீடியோவும் எதிர்வினைகளை ஆற்றிவருகிறது. என்றாலும், இந்த வீடியோ 691,000 மேற்பட்ட பார்வைகளையும் கிட்டத்தட்ட 5,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில் பல கருத்துகளையும் பெற்று வருகிறது. இதுகுறித்து பயனர் ஒருவர், “அவர் சொல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். கன்னடர்கள் மற்ற இடங்களுக்கும் - நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்கிறார்கள். வடக்கில் இந்த வகையான வெறுப்பை அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தி பேசுவதில் சிரமம் உள்ளது. பெரும்பாலான மக்கள் அவர்களுடன் பழகுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இங்குள்ள பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆகையால், இது முதலில் விவாதப் பொருளாக இருந்திருக்கக் கூடாது. மொழியின் பெயரால் ஏன் இந்த தேவையற்ற பிளவு” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.