இந்தியாவில் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்ட நகரமாக பெங்களூரு உள்ளது.
இந்தியாவில் இதுவரை அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. கோ-வின் போர்ட்டலில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஜூன் 3 ஆம் தேதி மாலை நிலவரப்படி, பெங்களூரு இதுவரை 29,34,030 முதல் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது, அதைத்தொடர்ந்து மும்பை 27,57,450 தடுப்பூசிகள், சென்னை 15,51,576 தடுப்பூசிகள், கொல்கத்தா 14,98,153 தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன.
இந்த மாதத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தவுள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1.41 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கர்நாடகா இந்த மாத இறுதிக்குள் இரண்டு கோடி தடுப்பூசிகளை செலுத்தும் பணியை நிறைவு செய்யும் என தெரிவித்திருக்கிறது.
ஜூன் மாதத்தில் கர்நாடகாவுக்கு 58.71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார். இதில் இந்திய அரசிடமிருந்து 45 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் மற்றும் மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 13.7 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பெறப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து பெறப்படும் 45 லட்சம் தடுப்பூசிகளில், 37,60,610 கோவிஷீல்ட் மற்றும் 7,40,190 கோவாக்சின் தடுப்பூசிகள் பெறப்படுகிறது.